மக்களுக்கு இலவசமாக தரும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் கமிஷன் அடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இலவசங்களால் மக்களுக்கு கிடைத்த லாபத்தைவிட, அதிகாரத்தில் இருப்பவர்கள் அடித்த கொள்ளை பல மடங்கு அதிகமாகும்.
மிக்சி, கிரைண்டர், மின்விசிறி திட்டத்தில், வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சில மாதங்களிலேயே காயலான் கடைக்கு போய்விட்டது. இதற்கு காரணம் பொருட்களை தயாரிக்க தொழிற்சாலைகள் கூட இல்லாத நிறுவனங்கள் ஏன், பருப்பு வியாபாரம் செய்கிறவர்களுக்கு அதிமுக அரசு டெண்டர் கொடுத்ததுதான். கோவையில் டெண்டர் கிடைக்காமல் கிரைண்டர் சங்கத்தினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை. காரணம் கமிஷன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட அனுமதிதான் முக்கிய காரணம்.
டெண்டர் பெற்றவர்கள் சீனாவில் இருந்து மலிவுவிலையில் இறக்குமதி செய்து ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டி, மஞ்சள் நிற அட்டை பெட்டியில் அடைத்து அரசுக்கு சப்ளை செய்துள்ளனர். இதில், பல பொருட்கள் பயனாளிகள் அட்டை பெட்டிகளை திறக்கும்போதே உடைந்த நிலையில் இருந்தன. அப்படியே நன்றாக இருந்தாலும் மிக்சி, கிரைண்டர், பேன் போன்றவை 2,3 நாட்களிலேயே ரிப்பேர் ஆகி, காயலான் கடைக்கு ரூ.100க்கும் 200க்கும் எடைக்கு விற்கப்பட்டுவிட்டன. இந்த டெண்டரில் மட்டும் ரூ.8 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 2016 ல் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் தற்போது பழைய இரும்புக்கடையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ள இலவச கிரைண்டர்களை பார்க்கும் போது , தரமற்ற பொருட்களை இலவசமாக மக்களுக்கு கொடுத்தால் வாக்கு வங்கி பெருகி மீண்டும் மக்களை கோமாளியாக்கலாம் என்பதை நிரூபிப்பதைப்போல் உள்ளது .
இன்னும் இலவசத்திற்கு ஆசைப்பட்டும், ஓட்டுக்கு பணம் பெற்றும் , நாம், நம் உரிமைகளை இழக்க போகிறோமா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.