தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் பேரவையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "எகிப்து நாட்டில் உள்ள குசிர்-அல்-காதிம், பெர்னிகா, ஓமன் நாட்டின் கோர்ரோரியில் அகழாய்வு நடத்தப்படும். இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளிலும் தொல்லியல் ஆய்வு நடத்தப்படும். கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. கீழடி அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசு பாதியில் கைவிட்டது.
கீழடி அகழாய்வு மூலம் சங்ககால தமிழர்களின் வாழ்க்கை முறையை உலகமே அறிந்துள்ளது. கீழடி அகழாய்வில் நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளிக்காசு கண்டறியப்பட்டுள்ளது. கீழடி நாகரிகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு நாகரிகம் என தெரியவந்துள்ளது. கொற்கை துறைமுகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும். முதுமக்கள் தாழியில் கண்டெடுக்கப்பட்ட நெல்மணிகளின் காலம் கி.மு. 1155 எனக் கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.