திருச்சி பிஷப் கல்லூரியின் நிர்வாகிகள் கூட்டம் இன்று (06.07.2021) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரி மாணவா் சோ்க்கை மற்றும் பாடத்திட்டங்கள், குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அனைத்து துறைகளைச் சோ்ந்த துறைத்தலைவர்களும் கலந்துகொண்டனா். மேலும், கல்லூரியின் வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது கல்லூரியில் பேராசிரியர் மாணவிகளிடம் அத்துமீறிய விவகாரம் குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள் ஆகியோர் கடந்த சில நாட்களாக தமிழ்த்துறை பேராசிரியா்களிடமும், மற்ற ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினர். அவா்கள் கொடுத்த தகவல் அனைத்தும் சேகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாணவிகளிடம் விசாரணை நடத்திவரும் நிலையில், அவா்களுடைய இறுதிகட்ட விசாரணை அறிக்கையைக் கொண்டு, நிர்வாக தரப்பில் பேராசிரியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.
கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தில் யாருக்கும் சாதகமாக செயல்படாது என்றும், குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், நடவடிக்கை நிச்சயம் எடுப்போம் என்றும், கல்லூரியின் பெயா் எந்தவிதத்திலும் கெட்டுப்போக கூடாது என்பதில் கவனமாக உள்ளோம் என்றும் கூறியுள்ளனா். மேலும் மாணவிகள் இதுபோன்ற பாலியல் ரீதியான குற்றசாட்டுகள் கூறும்போது, ஆரம்பத்திலேயே இப்பிரச்சனையை நிர்வாகத்திற்கு கொண்டுவர வேண்டும். மேலும் பேராசிரியா்கள் கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் அறிவுரை கூறப்பட்டுள்ளது. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் கல்லூரி நிர்வாகம் முனைப்பு காட்டிவருகிறது.