கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம் கூந்தலூர் கிராமத்தில் குளம் ஒன்று இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தக் குளத்தின் தண்ணீரைக் கோவில் வழிபாட்டிற்கும் குடிநீருக்காகவும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வந்தனர். பல ஆண்டுகளாக எந்தவித பராமரிப்புமின்றி இருந்ததால், சிலர் காலை கடன்கள் கழிக்கும் இடமாக மாற்றி அசுத்தப்படுத்தி, தற்போது குளமானது முற்றிலும் மாசடைந்து எதற்கும் பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கூந்தலூர் கிராமத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் (S.I) பாக்கியராஜ், இளைஞர்களை ஒன்றிணைத்து முதற்கட்டமாக வெளிபுறத்தைத் தூய்மைப்படுத்தி எச்சரிக்கை பதாகை வைத்தார். மேலும், பொதுமக்கள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து, 100 நாட்கள் வேலை மூலம் குளத்தைத் தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளார். இளைஞர்களோடு சேர்ந்து குளத்தை மறுசீரமைக்கும் காவல் உதவி ஆய்வாளரின் செயலைப் பிற கிராம மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.