இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்த வேண்டும் என்ற வணிக வரித்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருந்தது. அதில், “சமூகநீதிக்குப் பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி ஏய்ப்பு செய்வதை ஏற்க முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோவாக இருக்க வேண்டும்; ரீல் ஹீரோவாக இருக்க கூடாது” எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் நடிகர் விஜய்க்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகள் குவிந்துவருகின்றன. இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளதாவது, ''அன்பு தம்பி விஜய், அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது. துணிந்து நில். இது அவதூறுதானே ஒழிய குற்றம் இல்லை. தொடர்ந்து செல். ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு. பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றம் செல்லமாட்டார்கள். உண்மையை உணராமல் வழக்கு தொடர்ந்த காரணத்திற்காக குற்றவாளி போல சித்தரிப்பதா? விஜய் மீது அவதூறுகளை அள்ளிவீசுவது எவ்வகையிலும் நியாயம் இல்லை. ஒரு பொருளை வாங்கும் விற்பனை விலைக்கு இணையாக அரசுக்கு செலுத்த வரி விதிப்பது தவறு'' என நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நேற்று (14.07.2021) காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி கார்த்தி சிதம்பரமும், ''இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரி குறைப்பு கேட்டு முறையிடுவது அவர்களது உரிமை. வரி குறைப்பு கேட்டவர்களை நடிகர் என பார்ப்பது தவறு'' என நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.