சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் 'தமிழ் வெல்லும்' என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு இரண்டு நாட்கள் ‘அயலகத் தமிழர் தினம் 2024’ விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12.1.2024) கலந்துகொண்டு தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கி, 'எனது கிராமம்' என்ற முன்னோடித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எனக்கு உடல் நலமில்லை. உற்சாகமாக இல்லை. என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும். நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது. வெள்ள நிவாரணமாக ஆறாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு, யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த சகோதரி. அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி தான் எனக்கான உற்சாக மருந்து.
எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன். அண்மையில், இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது, தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்தச் சென்ற தமிழர்களை கொண்டாடும் மாநாடு” எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் நாட்டு உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கா. சண்முகம், தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், மலேசியா நாட்டு சட்டம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை அமைச்சர் எம். குலசேகரன், இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் எம். செந்தில் தொண்டமான், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன், அயலகத் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, தலைமைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.