பனங்காட்டுப் படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜா என்பவரின் வீட்டில் இருந்து துப்பாக்கி, மான் கொம்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆணைக்குடி பகுதியைச் சேர்ந்தவர் ராக்கெட் ராஜா. இவர் பனங்காட்டுப் படை கட்சியின் தலைவராக உள்ளார். இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இந்நிலையில், அவரது வீட்டில் போலீசார் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பழைய மான் கொம்பு, ஒரு பைனாக்குலர், அரிவாள், ஒரு துப்பாக்கி ஆகியவை போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ என்பவர் மற்ற கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். பணம் கேட்டு மிரட்டியதாக முத்து மனோ என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் மற்ற கைதிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். சிறை வளாகத்திற்குள்ளேயே ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கிக் கொலை செய்தது.
இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் முக்கிய குற்றவாளியாக ஜேக்கப் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இன்று கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையில் ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த சோதனையில் தூப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் பொழுது ராக்கெட் ராஜா வீட்டில் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.