கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே ராகிங் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "ராகிங் தொடர்பாக, பெற்றோர் அல்லது பாதுகாவலர் அளிக்கும் புகார் மீது காவல்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வி நிறுவனம் தரப்பில் அலட்சியம் காரணமாக புகாரளிப்பதில் தாமதம் செய்தால் அவர்கள் மீதும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே ராகிங் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும், விடுதியில் முழு நேரக் கண்காணிப்பாளர் தங்கியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வி வளாகத்தில் முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.