அதிமுக ஆட்சியின்போது, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதுமட்டுமின்றி அவருக்கு சொந்தமான 52க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சோதனை நடைபெற்றுவருகிறது.
எஸ்.பி. வேலுமணி, கோவைக்கான திட்டங்கள் பலவற்றில் கோடிக்கணக்கில் மோசடி செய்து ஊழல் செய்திருகிறார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமென ரேஸ்கோர்ஸ் ரகுநாத் என்கிறவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் அனைத்துத் துறையின் ஒப்பந்தங்களிலும் 12 சதவீதம் கமிஷன் வாங்கினார் என்றும் சொல்லியிருந்தார். இது தொடர்பாக டி.ஜி.பி.க்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பியிருக்கிறேன் என்றார்.
இதேபோல கோவையைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவர், எஸ்.பி. வேலுமணியும் அவரது உதவியாளரும் பண மோசடி செய்துவிட்டார்கள். எஸ்.பி. வேலுமணியிடம் 2016ஆம் ஆண்டு, தான் காண்ட்ராக்ட் சம்பந்தமாக முன்தொகையாக ரூ. 1 கோடியே 20 லட்சம் கமிஷன் கொடுத்தேன். சிவில் ஒர்க் பணிகள் ஒதுக்கீடு செய்வதாக கூறி பணத்தைப் பெற்ற அப்போதைய அமைச்சர், அதன்பின் எனக்குப் பணி ஒதுக்கவில்லை. இப்படியே வருடங்களை ஓட்டிவிட்டார். இப்போது ஆட்சி மாறிவிட்டது. அதனால் பணத்தைத் திரும்பக் கொடுங்கள் என்று கேட்டதற்கு மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.
அதோடு 2016ஆம் ஆண்டு ஜனவரியில் எஸ்.பி. வேலுமணி, சொன்னதன் பேரில் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் ரோஜா இல்லத்திற்கு நேரில் சென்றேன். ஒரு கோடியே 20 லட்சம் ரூபாயை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்துக் கொடுத்தேன். அவர் சொன்னபடி அவருடைய பி.ஏ.வான பார்த்திபனிடம் ஐந்து லட்ச ரூபாயையும் கொடுத்தேன். ஆனால் எஸ்.பி. வேலுமணி சொன்னபடி எனக்கு சிவில் ஒர்க் காண்ட்ராக்ட் கொடுக்கவில்லை. வேறு ஒப்பந்ததாரர்களுக்கு அப்பணிகளைக் கொடுத்துவிட்டார். பணி ஒதுக்காமல், பணத்தை ஒதுக்கிக்கொண்டார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால், ‘பணத்தைக் கொடுக்கிறோம், பொறுத்திருங்கள். எங்களை அவசரப்படுத்தினீர்கள் என்றால் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம்’ என்று கொலை மிரட்டல் விடுத்தனர் எனக் கூறியிருந்தார். சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளின் சிவில் பணிகளில் பல ஒப்பந்தங்களை வழங்கியதில் நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டார் எஸ்.பி. வேலுமணி. அவரோடு சேர்ந்து 16 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. 13 (2) r/w, 13 (i) (c) மற்றும் 13 (1) (d) தடுப்புச் சட்டம் r/w 109 IPC ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
எஸ்.பி. வேலுமணியும், அவரோடு சேர்ந்த குற்றவாளிகள் அன்பரசன், கேசிபி பொறியாளர்கள், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர். முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, தி ஏஸ்-டெக் மெஷினரி இந்தியா பிரைவேட் லிமிடெட், கான்ஸ்ட்ரோனிக்ஸ் இன்ஃப்ரா லிமிடெட், கான்ஸ்ட்ரோமால் குட் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ மகா கணபதி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் ஃபவுண்டேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், வைதுர்யா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலம் கோல்ட் & டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஏ.ஆர். இ.எஸ். பி.இ. இன்ப்ரா பிரைவேட் லிமிடெட், சிஆர் கட்டுமானத்தின் கு. ராஜன் உட்பட தெரியாத அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவாகியிருக்கிறது.
நீதிபதி எம். சத்தியநாராயணன் தலைமையிலான சென்னை உயர் நீதிமன்றம், ஆரம்ப விசாரணையை நடத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஆர். பொன்னியை நியமித்தது. ஆர். பொன்னி விசாரணை நடத்திய பிறகு, 18 டிசம்பர் 2019 அன்று ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார். எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இந்த நிலையில், கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீட்டிலும், சென்னையில் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான ஒருவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
வேலுமணிக்கு நெருக்கமான, அதிமுக வடவள்ளி சந்திரசேகருக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. அதோடு, மதுக்கரையில் வேலுமணியின் மைத்துனரும், மதுக்கரை நகரச் செயலாளருமான வெல்டிங் ராஜா என்கிற சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடக்கிறது. வேலுமணியின் வீட்டில் சோதனை நடப்பதையறிந்த அதிமுகவினர், அவரது வீட்டின் முன்பு குவிந்திருக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீதும், 9 நிறுவனங்களின் மீதும் வழக்குப் பதிந்திருக்கின்றனர்.