விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் வெற்றி, இந்திய அளவிலும் மிகப்பெரிய ஷாக் அனுபவத்தைக் கொடுத்தது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே, அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் முன்னிலையில் இருந்ததும், கடைசிகட்ட வாக்கு எண்ணிக்கை மாறி மாறி முன்னிலை நிலவரங்களைத் தந்ததும்தான் அதற்கான காரணம்.
சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை விட சில ஆயிரம் வாக்குகள் பின்னிலையிலேயே இருந்தார். ஆரம்பத்தில் எண்ணப்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் மற்றும் புவனகிரி ஆகிய சட்டமன்றத் தொகுதிவாரியாக முறையே 1,550, 4,641, 25,036 மற்றும் 1,230 வாக்குகள் என திருமாவளவன் பின்னடைவையே சந்தித்தார். மாலை வரை இருந்த இந்த நிலவரங்களை மாற்றியது சிதம்பரமும், காட்டுமன்னார் கோவிலும்தான்.
அந்தத் தொகுதிகளில் முறையே 4,094 மற்றும் 31,232 வாக்குகள் அதிமுக வேட்பாளரை விட கூடுதலாக பெற்றார் திருமா. இதில் தபால் ஓட்டும் 250 கூடுதலாக கிடைக்க, 3,219 வாக்குகள் முன்னிலையுடன் திக் திக் வெற்றி பெற்றார் திருமாவளவன். தமிழக அளவில் வெற்றிபெற்ற மற்ற வேட்பாளர்களை விடவும், வாக்கு வித்தியாசத்தின் அடிப்படையில் மிகக்குறைவான எண்ணிக்கையே பெற முடிந்திருந்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த வேட்பாளராகவே திருமாவளவன் கருதப்பட்டார்.
தற்போது அந்த வெற்றியும் கிடைத்துவிட்டது. குறிப்பாக, மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் சட்டமன்றத் தேர்தலின் போது காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட திருமாவளவன், வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். மக்களவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதிதான் அவரது வெற்றி வாய்ப்பை உறுதி செய்தது.