தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு ரவுடிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன் பிறகு நடைபெற்ற என்கவுன்டர் சம்பவங்களும் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆம்ஸ்ட்ரோங் கொலை சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் இது குறித்து உதவி காவல் ஆணையர் இளங்கோவன் 'சென்னையின் உடைய ரவுடிகள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்' என்று பேசியதாக புகார் எழுந்தது. இதனை மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து உதவி காவல் ஆணையர் இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அருண் பேசும் போதும் 'ரவுடிகளுக்கு அவர்களுடைய மொழியில் பாடம் கற்பிக்கப்படும்' என குறிப்பிட்டு இருந்தார். அது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க அவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதியும், மனித உரிமை ஆணையருமான மணிக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காவல் ஆணையர் அருண் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில் ரவுடிகளை மிரட்டும் வகையிலோ அல்லது ரவுடிகளை அச்சுறுத்தும் வகையிலோ அவ்வாறு எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அதேவேளையில் குற்றங்களின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஆகவே குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரவுடிகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர அவர்களுக்கு இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கும் வகையில் தான் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இதில் எந்த விதமான மிரட்டலோ, என்கவுண்டர் செய்யும் அளவிற்கு வார்த்தைகளோ இடம்பெறவில்லை' என குறிப்பிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணையம் அவரை இந்த வழக்கிலிருந்து நீக்குவதாக தெரிவித்து இருக்கிறது. தொடர்ந்து வழக்கு விசாரணையானது அக்டோபர் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.