நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
மறுபுறம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தேர்தல் சுவர் விளம்பரங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் சோதனைகளில் ஈடுபட்டு சரியான ஆவணமின்றி எடுத்துச் செல்லும் பணம் மட்டும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோட்டில் தேர்தல் பறக்கும் படையினர் 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த நிலையில் பணத்தை கொண்டு வந்த நபர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோம்புபள்ளத்தில் காரில் சென்றவர்களிடம் தாசில்தார் மாரிமுத்து தலைமையிலான பறக்கும் படை குழுவினர் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். 50,000 ரூபாய் வரை மருத்துவ செலவுக்காக எடுத்துச் செல்லலாம் எனக்கு கூறப்பட்டிருக்கும் நிலையில் 47 ஆயிரம் ரூபாயை நீங்கள் பறிமுதல் செய்துள்ளீர்கள் என அதிகாரிகளுடன் காரில் சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த வாக்குவாதம் தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'உங்களுக்கு தேர்தல் பறக்கும் படை வேலை இருக்கிறது என்றால் எங்களுக்கெல்லாம் வேலை இல்லையா? ஹாஸ்பிடலுக்கு கட்டுவதற்காக 47 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டுப் போக முடியாதுன்னு சொல்றீங்க. எப்படி சார் எடுத்துட்டு போகாம இருக்கிறது. செய்தியில் சொல்றாங்க 50,000 வரை எடுத்துக்கொண்டு போலாம்னு. அதுவும் ரவுண்டா ஐம்பதாயிரம் கூட இல்லை 47,000 தான் இருந்தது. அந்த ஜி.ஓ வ எங்களுக்கு கொடுங்க. எங்கள் பணத்தை நாங்கள் எலக்சன் முடிஞ்ச பிறகு கூட வாங்கிக்கிறோம்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.