ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிப் பெண், கடந்த 6ஆம் தேதி (06.02.2025) மதியம் கோவை - திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் சொந்த ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹேமராஜ் என்பவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த (சிசு) குழந்தை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவரின் வயிற்றில் இருந்த சிசுவின் இதயத்துடிப்பு நின்றதையடுத்து கருக்கலைப்புக்கான மாத்திரை கொடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டது.
கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரயிலில் மீண்டுமொரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே தூத்துக்குடி- ஈரோடு செல்லும் ரயிலில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 26 வயது இளம்பெண் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். கொடைரோடு அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது, அந்த பெண்ணுக்கு சதீஷ்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மதுபோதையில் இருந்த அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.