சென்னை செங்குன்றம், பாடியநல்லூர் ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் ஆட்டோர் ஓட்டுநராகவும், மெக்கானிக் செட்டிலும் பணிபுரிந்துவருகிறார். இவர், செங்குன்றம் அடுத்த கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்துவந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டு, பாடியநல்லூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
மதனின் மனைவி, தனது நண்பர்களுடன் செல்போனில் அடிக்கடி பேசிவந்ததுள்ளார். இதனால் மதன், மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி, மதனின் மனைவி தனது தாயை சொல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவரது தாய், வேலையாக இருப்பதாகவும், பிறகு பேசுவதாகவும் கூறி போனை வைத்துள்ளார்.
அதேபோல், அவர் தன் வேலையை முடித்துவிட்டு மகளுக்கு போன் செய்தபோது அதனை எடுத்த மதன், மனைவி பாத்திரம் கழுவிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். மீண்டும் பலமுறை தொடர்பு கொண்டபோது எந்தவித தகவலும் கிடைக்காததால், மறுநாள் மகளை பார்ப்பதற்கு தாய் நேரடியாக சென்றுள்ளார். ஆனால், மகள் வீட்டில் இல்லை.
இது குறித்து அவர், மதனிடம் கேட்டபோது பெரம்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த பெண்ணின் தாய், அக்கம்பக்கம் விசாரித்துள்ளார். அப்போது மூன்று தினங்களாக தமிழ்செல்வி வீட்டில் இல்லை என்பதும், மதனுடன் ஆட்டோ டிரைவர் ஒருவர் தங்கி இருந்ததும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், செங்குன்றம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அவரது புகார் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சா போதையில் பிடிபட்ட மதனிடம் விசாரித்தனர். அப்போது, மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை ஆந்திர மாநிலம் கைலாச கோணா அருவிக்கு அழைத்துச் சென்று, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி வந்து விட்டதாகக் கூறியுள்ளார் .
மேலும், மதனுக்கு கஞ்சா போதை பழக்கம் இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து செங்குன்றம் காவல்துறையினர் ஆந்திர காவல்துறையினரின் உதவியுடன் மதன் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தேடியும் அப்பெண்ணின் சடலம் கிடைக்கவில்லை. ஆனால் அப்பகுதியிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, மதனுடன் அவரது மனைவி பைக்கில் செல்வது பதிவாகி இருந்தது. இதனால் குழப்பம் அடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டும் துப்பு கிடைக்காமலிருந்தது.
மதன் கூறியது போல் அப்பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவர் மாயமானதில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா? என்ற குழப்பம் இவ்வழக்கில் நீடித்து வந்தது. இந்நிலையில், ஜூலை 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அருவி அருகே மசாஜ் செய்பவர்கள் அப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக ஆந்திர மாநிலம் நாராயண புரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
அந்தத் தகவலை நாராயணபுரம் காவல்துறையினர் செங்குன்றம் காவல்நிலையத்திற்கு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற தமிழக போலீசார், புதர் மண்டிய பகுதியில் அப்பெண்ணின் உடலைக் கண்டெடுத்தனர். அவர் கொலை செய்யப்பட்டுப் பல நாட்கள் ஆனதால், எலும்புக்கூடாய் மீட்கப்பட்டார். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ஆந்திர மாநிலம் புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. பிணமாகக் கிடந்தது அப்பெண் தானா என்பதை உறுதி செய்ய தடயவியல் நிபுணர்கள் மூலம் டி.என்.ஏ சோதனை நடத்த இருக்கிறார்கள். இந்த நிலையில் இக்கொலை சம்பவத்தில் மதன் மட்டுமின்றி அவருடன் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்பதைப் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.