இந்திய ரயில்வே துறையில் சொகுசு மற்றும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இருக்கும் என முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டபோது தெரிவிக்கப்பட்டது. நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்கள் நீலம் - வெள்ளை நிறம் மற்றும் காவி - சாம்பல் நிறத்திலும் இருக்கும் வகையில் இருக்கும் வகையில் வரை இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் - மைசூர், சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, கோயம்புத்தூர் - பெங்களூரு கண்டோன்மென்ட், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய நகரங்கள் இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே சார்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.