Skip to main content

சிவராமன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

Published on 22/08/2024 | Edited on 22/08/2024
Another pocso case against Sivaraman

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 17 மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கியுள்ளனர். இத்தகைய சூழலில் தான் கடந்த 9 ஆம் தேதி கலையரங்கில் வழக்கம்போல் 12 வயது சிறுமி ஒருவர் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அன்றைய தினம் அதிகாலை 3 மணியளவில் அங்கு வந்த தேசிய மாணவர் படையின் பயிற்றுநர் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த சிவராமன் (வயது 32) சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியின் ஆசிரியர், முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளார். அப்போது பள்ளியின் முதல்வர் சதீஸ்குமார் அந்த சிறுமியிடம் இந்த சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். இதனால் பெற்றோர்கள் பெரிதும் வேதனை அடைவார்கள் என்று கூறியுள்ளார். தொடர்ந்து கடந்த கடந்த 16 ஆம் தேதி பள்ளி மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தனது பெற்றோரிடம் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்தும், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்தும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியின் தாயார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியைச் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்தபோது மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் பேரில் என்.சி.சி. பயிற்று சிவராமன், பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சதீஸ் குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன் என்.சி.சி. பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து முக்கிய நபரான சிவராமனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக முழுமையான விசாரணைகள் நடக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை புலனாய்வு ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை செயலாளர், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உட்பட ஏழு பேர் இந்த குழுவில் உள்ளனர். இன்று காலை இந்த குழு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டது. இந்த சம்பவம் நடந்த பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், அதேபோல் சிவராமனால் வேறு யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்த இருப்பதாக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சிவராமன் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் புகார் கொடுத்துள்ளார். கிருஷ்ணகிரி நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு மீண்டும் போக்சோ சட்டம் சிவராமன் மீது பயந்துள்ளது. அதேபோல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சுற்றுலா மாளிகையில்  பாதிக்கப்பட்டவர்கள்  தைரியமாக  இரவு 7 மணிக்குள் புகார் அளிக்கலாம். உரிய  நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்