கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
கோவை மாவட்டம் உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் வெடித்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் வெடித்த இடத்திலிருந்து ஆணிகள், பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்ட பல வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீன் என்பதும் அவரது வீட்டில் 75 கிலோ வெடி பொருட்களைப் பதுக்கி வைத்து இருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தால்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர் கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்த நிலையில், அதில் 5 பேரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு முகமை இந்த வழக்கு சம்பந்தமாக 12வது நபராக கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த இத்ரீஸ் என்பவரைக் கைது செய்துள்ளது. இவர், உயிரிழந்த ஜமேசா முபீனின் நெருங்கிய நண்பர் என்று சொல்லப்படுகிறது.