கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டவர்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சேலம் சரக டிஐஜி தலைமையிலான குழு, முதல்கட்ட விசாரணையை வியாழக்கிழமை (ஜூலை 21) முதல் தொடங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் பிளஸ்2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து, பல்வேறு தரப்பைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்டோர் பள்ளிக்குள் புகுந்து அங்குள்ள பொருள்களை சூறையாடினர். பள்ளிப் பேருந்துகள், காவல்துறை வாகனங்களைத் தீ வைத்துக் கொளுத்தினர்.
இந்தக் கலவரத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளதா, அமைப்பாக திரண்டார்களா, சாதிய பின்னணி உள்ளதா என்பது குறித்து விசாரிக்க, சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையில் சிறப்புக்குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
டிஐஜி தலைமையில் ஒரு எஸ்பி, 3 ஏடிஎஸ்பிக்கள், 6 டிஎஸ்பிக்கள், 9 ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. புலனாய்வு அனுபவம் வாய்ந்த அதிகாரிகளைத் தேர்வு செய்து குழுவில் நியமித்து உள்ளனர்.
அதன்படி, டிஎஸ்பிக்கள் அம்மாதுரை (திருப்பத்தூர்), அண்ணாதுரை (திருவண்ணாமலை), ரவிச்சந்திரன் (ராணிப்பேட்டை), தையல்நாயகி (சேலம் புறநகர்), விஜயராகவன் (கிருஷ்ணகிரி), அகஸ்டின் ஜோஷ்வா லாமேக் (மயிலாடுதுறை) ஆகியோர் விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அதேபோல், காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன் (விழுப்புரம் வளவனூர்), பாலகிருஷ்ணன் (சங்கராபுரம்), மகேஸ்வரி (கள்ளக்குறிச்சி ஏசிடியு), சுமதி (உளுந்தூர்பேட்டை), தேவேந்திரன் (கடலூர் ரெட்டிச்சாவடி), பிரகாஷ் (வேலூர்), கவிதா (திருவண்ணாமலை குற்றப்பிரிவு), நாகராஜ் (தேன்கனிக்கோட்டை) ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மட்டுமின்றி வாலாஜாபேட்டை தலைமைக் காவலர் அரவிந்தன், விழுப்புரம் சைபர் கிரைம் காவலர் மணிமாறன், கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவலர் பார்த்திபன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
சேலம் சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையிலான இந்தக்குழு, கலவரம் தொடர்பான விசாரணையை வியாழக்கிழமை (ஜூலை 21) தொடங்கியது. இக்குழுவின் விசாரணையில், கலவரக்காரர்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.