பா.ஜ.க.வின் அதி தீவிர ஆதரவாளரும், தி.மு.க மீது கண்டதையும் கிளப்பி விடுபவருமான யுடியூப் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு கடுமையாகக் கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, கவர்னர் ரவியை சந்தித்து, பா.ஜ.க. ஆதரவாளர்களை காவல்துறை கைது செய்வதாகக் கூறி டி.ஜி.பி. மீது புகார் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் பா.ஜ.க.வின் மாநில நிர்வாகி ஒருவர், 'மாரி தாஸ் சரியான நபரல்ல. அவரை நாம் ஆதரிக்கக்கூடாது' என்று கூறி அவரைப் பற்றிய புகார்களை கட்சியின் டெல்லித் தலைமைக்கு அனுப்பியிருக்கிறார்.
இதற்கிடையே மாரிதாஸ் மீது சென்னையில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதில், 27ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதேசமயம், முன்பாக ட்விட்டரில் அவர் பதிவிட்டிருந்த கருத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மதுரை ஹைகோர்ட் கிளை ரத்து செய்தது. இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று மீண்டும் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு தேனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இப்படி தொடர்ந்து அவர் மீது புகார்களும், சிறைப்படுத்தல் நடவடிக்கையும் ஏற்பட்டு வருவதால் விரைவில் அவர் மீது குண்டாஸ் பாயவும் வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்களில் இருந்தே தகவல்கள் கசிகின்றன.