தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பெரிய வணிக வளாகங்கள், கோயில்கள், கடற்கரைகள் முதலியவை நோய்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளும் கடந்த சில நாட்களாக திறக்கப்பட்டு மாணவர்கள்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே திரையரங்குளில் 50 சதவீத பார்வையாளர்கள், பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. கரோனா தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மேலும் சில கட்டுப்பாடுகளை வழங்கக்கோரி அரசிடம் தொடர் கோரிக்கைகள் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை செய்தார். அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கரோனா கட்டுப்பாடுகள் மார்ச் 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 16ம் தேதி முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மதம், மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை தொடரும். மரண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு 200 பேர் வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.