Skip to main content

“எங்களையும் முன்களப்பணியாளராக அறிவியுங்கள்” - அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

Announce us as frontline workers too - Anganwadi staff request

 

மாவட்டங்கள் தோறும் கரோனா தடுப்புகுழு போடப்பட்டு, அதில் வட்டாரங்கள் வாரியாக அங்கன்வாடி ஊழியர்களையும் இணைத்து செயலாற்றிவருகிறது சமூக நலத்துறை. “கரோனா தடுப்புப் பணியினால் இதுவரை மாநிலம் முழுவதும் 32 பேர் இறந்துள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் மகத்தான மக்கள் பணியினை ஆற்றிவருகிறோம். எனவே எங்களையும் கரோனா களப்பணியாளர் அமைப்பு குழுவில் இணைத்து பணி செய்துவருவதால் எங்களையும் முன்களப்பணியாளராக அறிவிக்கவும்” என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் அங்கன்வாடி ஊழியர்கள்.

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கமோ, “கரோனா தொற்று எந்த இடத்தில் அதிகம் கண்டறியப்படுகிறதோ அந்த இடங்களுக்குச் சென்று, காய்ச்சலைக் கண்டறிவது, வெளியூரிலிருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தருவது, கபசுரக் குடிநீர் காயச்சி வழங்குவது, முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு, மருந்து மாத்திரை மற்றும் சமையல் செய்து கொடுப்பது, தினமும் சென்று பார்த்து அவர்களின் நிலைகுறித்து அறிக்கை அறிவித்தல், குடும்ப வன்முறை, பணிசெய்தல், அறிக்கை அறிவிப்பது, கரோனா கேம்ப்களுக்கு மக்களை அழைத்து வருவது, அவர்களை தினமும் கண்கானிப்பது, சீட்டு எழுதி கொடுப்பது, கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஒத்துழைப்பு தருவது என ஊழியர்கள் அனைத்து பணிகளையும் தாய்மை உணர்வோடு, தான் மேற்கொண்டுள்ள பணியின் மீது உள்ள அக்கறையோடும், எங்களுடைய சொந்த செலவிலேயே அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி பணி செய்துவருகிறோம்.

 

சமூகநலத்துறையின் கீழ் உள்ள இத்திட்டத்தில் குறைந்த ஊதியத்தில் இந்தப் பணிகளை செய்துவருகிறோம். இதில் பெரும்பான்மையானவர்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பணியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தப் பணிக்கு அழைக்கும்போது நீங்கள் முன்களப்பணியாளர்கள் என்று சொல்லித்தான் பணி செய்ய அழைத்தார்கள். தமிழகம் முழுவதும் இந்தக் கரோனா பணிசெய்து இறந்த ஊழியர், உதவியாளர்களில் இதுவரை ஒருவருக்கு கூட அரசு அறிவித்த கரோனா இறப்பு நிதி வழங்கப்படவில்லை. எந்த ஒரு பயனும் இன்றி தற்போதுவரை அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனினும், அதற்கான எந்த விதமான ஊதியமும் வழங்கப்படவில்லை, அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. அதையும் பொருட்படுத்தாமல் வீடுவீடாகச் சென்று உணவு பொருள் வழங்கி, மகத்தான மக்கள் பணியினை ஆற்றிவருகிறோம். ஆகவே, இந்த மக்கள் நல அரசு அங்கன்வாடி ஊழியர்களின் தன்னலமற்ற இந்தப் பணிகளை எல்லாம் கணக்கில்கொண்டு அவர்களையும், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அவர்களைக் கரோனா முன்களப்பணியாளர் என அறிவித்து, அவர்களின் பணியை அரசு அங்கீகரிக்க வேண்டும்” என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்