சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதியர்களாக 202 பேர் பணியாற்றி வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் சுமார் 14 ஆண்டுகளாக ரூ. 4 ஆயிரம் ஊதியத்தில் இந்த 202 குடும்பத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தங்களைப் பணி நிரந்தம் செய்யக்கோரியும், ஊதிய உயர்வு கோரியும் பலவேறு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை பணி நிரந்தரம் கோரி நிர்வாண போராட்டம் நடத்தப் போவதாக தொகுப்பூதியர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் பாதுகாப்பிற்குக் குவிக்கப்பட்டிருந்தனர்.இதனையடுத்து தொகுப்பூதியர்கள் 5 பேர் கொண்ட குழுவினர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசனை சந்தித்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது தொகுப்பூதியர்கள் சங்க பிரதிநிதிகள் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதற்குத் துணைவேந்தர் பதில் அளிக்கையில், தொகுப்பூதியர் கோரிக்கைகள் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து கோரிக்கைள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தார். பின்னர் தொகுப்பூதியர்கள், தமிழக அரசு உடனடியாக எங்கள் குடும்பத்தை காப்பாற்றும் வகையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ரூ.4 ஆயிரம் ஊதியத்தை வைத்து எப்படி குடும்பம் நடத்த முடியும் என கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த அண்ணாமலை நகர் போலீசார் அவர்களை வெளியேற்றி அனுப்பி வைத்தனர்.