சிதம்பரம் அருகே மேல் அனுவம்பட்டு கிராமத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி குறித்து கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு வேளாண் விரிவாக்கத் திட்டப் பொறுப்பாளர் இணை பேராசிரியர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மேல் அனுவம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தவமணி மருதப்பன், துணைத் தலைவர் கலா அய்யாசாமி முன்னிலை வகித்தனர்.
பல்கலைக்கழக வேளாண் புல உழவியல் துறை இணை பேராசிரியர் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வேளாண் மாணவிகள் கிராமத்தில் விவசாயிகளின் வாழ்விட பகுதியில் தங்கிக் கொண்டு அவர்கள் செய்யும் விவசாயத் தொழிலை நன்கு கற்றும் நவீன வேளாண்மை குறித்தும் விவசாயிகளிடம் கூறுவதால் விவசாய வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கும் எனப் பேசினார். மேல் அனுவம்பட்டு பணி தளப் பொறுப்பாளர் ஆதி சண்முகம் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவிகளின் குழுத் தலைவி ஷாஷினி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வினை மாணவி சண்முக லட்சுமி தொகுத்து வழங்கினார். விழாவின் இறுதியில் மாணவிகளின் குழு துணைத் தலைவி ஷர்மி நன்றி கூறினார். இதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம், இயற்கை வேளாண்மை பற்றிய முக்கியத்துவம் பற்றியும், தொடர்ந்து பல்கலைக்கழக 15 பேர் கொண்ட மாணவிகள் குழுவினர் வயல்களுக்குச் சென்று பயிர் சாகுபடி குறித்தும், களப் பணி மேற்கொண்டு விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.