சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் பள்ளிக்கு தீவைக்கப்பட்டது. அதிலிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது. அப்போது பலர் இந்த பள்ளியின் பொருட்களை அள்ளி சென்றனர். பள்ளியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பொருட்களை கொண்டு வந்து ஒப்படைக்குமாறு வருவாய் துறை மூலம் அப்பகுதி சுற்றிலும் உள்ள பெத்தாணூர், இந்திலி மேலூர் பங்காரம் தொட்டியம் உட்பட பல கிராமங்களில் தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த பலர் தாங்கள் எடுத்துச் சென்ற டேபிள் சேர் போன்றவைகளை கொண்டு வந்து பள்ளி வளாகத்திற்குள் போட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், 14 ஜோடி தங்க தோடுகளை போலீசார் முன்னிலையில் சின்ன சேலம் பகுதியில் சேர்ந்த ஒரு தொழிலாளி கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார்.
சின்னசேலம் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தான் பள்ளி தாளாளர் வீட்டில் இருந்து எடுத்துச் சென்றதாக கூறி 14 ஜோடி தங்க தோடுகளை நேற்று காலை சின்ன சேலம் காவல் துறையினரிடம் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளார். அதன் மதிப்பு ரூபாய் 5 லட்சம் எனக் கூறப்படுகிறது.