கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமானவரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், "செந்தில் பாலாஜி எல்லா விதமான குறுக்கு வழிகளையும் பயன்படுத்தி இந்த வழக்கை நடத்தக்கூடாது என்று முயற்சி எடுத்துக்கொண்டு இருந்தார். அதில் குறிப்பாக இந்த காம்ப்ரமைஸ் வழக்கு என்பது இந்தியாவில் எங்கும் நடந்தது கிடையாது. முதல் முறையாக 13 பேர் சேர்ந்து செந்தில் பாலாஜி, சண்முகத்துடன் இணைத்து சமாதான வழக்கு போட்டு இருப்பது வியப்புக்குரியது. உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் மிக தெளிவாக உள்ளது. எந்த விதத்திலும் கடுகளவு கூட அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை. அமலாக்கத்துறை தனது கடமையை சுதந்திரமாக செய்கிறது. ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை செய்து வருகிறது. சுதந்திரமாக செயல்படுகிறது. இதில் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை.
நேற்று காலை நடைப்பயணம் சென்றுவிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளரிடம் கூறும்போது, ‘அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக சொன்னார்கள். இதையடுத்து நாள் முழுவதும் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் 24 மணி நேரங்களுக்கு முன்னராக அரசுக்கு தெரிவிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எல்லாம் தீர்ப்பின் பல இடங்களில் உள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வர உள்ளதாக கேள்விப்பட்டேன். திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராக உள்ளதாக கேள்விப்பட்டேன். அமலாக்கத்துறை அதிகாரிகள் அதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். ஆட்கொணர்வு மனு இந்தியாவில் மிக முக்கியமானது.
தனி மனிதனின் ஒரு உச்சக்கட்ட உரிமையை பாதுகாக்க தான் ஆட்கொணர்வு வழக்கு உள்ளது. முதல்வரும், அமைச்சர்களும் ஒரு குற்றம் சாட்டியுள்ள, குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு குற்றவாளி அமைச்சரை சந்தித்து அது காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பும் போது மக்கள் மனதில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா என்பது குறித்து மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை முதல்வர் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ஒரு டாஸ்மாக் கடையில் மது விற்கும் ஒருவரை கேட்டாலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் என்று சொல்லுவார். இதை சொல்வதற்கு அண்ணாமலை வேண்டும் என்ற அவசியம் இல்லை. சாதாரண பொது மக்களுக்கும் தெரியும் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று.
ஏனென்றால் இந்த வழக்கு பற்றி முழுவதும் தெரிஞ்சவன் நான். 2018 குற்றப்பத்திரிகை தாக்கல், 2019ல் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது எல்லாம் தெரியும். இவர்கள் உயர் நீதிமன்றம் தாக்கல் செய்த ரத்து செய்யும் மனுவானது எதுவும் நிக்காது என்பது அடிப்படை சட்டம் தெரிந்த எல்லோருக்கும் இது பற்றி தெரியும். அந்த அடிப்படையில் தொடர்ந்து நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். இந்த வழக்கில் உள்ள தடைகளை உடைத்து அமலாக்கத்துறை வழக்கை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.