தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த 2018-ம் ஆண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே ஆண்டு மே மாதம் 22 ஆம் தேதியன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு என்ன காரணம் யாருடைய உத்தரவின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 4 ஆண்டு கால விசாரணையில் 3,000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு 17 போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான்கு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அறிக்கையின் அடிப்படையில் சம்பவத்தின் போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலையை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
திருமலை தற்போது நெல்லை சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணிபுரிகிறார். மேலும் நெல்லை மாவட்ட திசையன்விளை காவல் நிலையத்தில் கிரேடு 1 காவலராக பணிபுரியும் சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஸ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம், இந்த விவகாரத்தை ஐந்தாண்டுகள் ஆராய்ந்துள்ளது. வடிவேல் ‘கிணத்த காணோம்... கிணத்த காணோம்...’ என்று சொல்வதுபோல் இந்த ஆணையமும் எங்களுக்கு தெரியவில்லை என்கிறது. இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் யார் என இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஒருபுறம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அது சரியான நடவடிக்கையா அல்லது தவறானதா என்பது விவாதிக்கக் கூடியது. ஐ.ஜி., டி.ஐ.ஜி, எஸ்.பி. என அதிகார படிநிலை உள்ளது. அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. ஏன் டி.ஜி.பி. மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு காவலர் தனக்கு கிடைத்த தகவலை தவறாகப் பயன்படுத்தி ஒரு துப்பாக்கியை எடுத்து 17 முறை சுட்டிருக்கிறார். இது தவறு தான். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கை எடுத்து எங்குமே பார்த்ததில்லை. யார் தவறு செய்திருக்கிறார்களோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆணையத்தின் அறிக்கையில் ஓரிடத்தில், இதற்கு மிஷனரி குரூப்புக்கு சம்மந்தம் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைப் பற்றி இந்த ஆணையம் தெளிவாக பேசவில்லை. இந்த ஆணைய அறிக்கையை பொறுத்தவரையில் ஆசையை காட்டியுள்ளதே தவிர, உண்மையை காட்டவில்லை. ஆகையால் இந்த ஆணைய அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து, இந்த வன்முறையை தூண்டிவிட்ட குற்றவாளிகள் சர்வதேச அளவில் இருந்தாலும் அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.