Skip to main content

சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி! - அண்ணாமலை சொல்வது என்ன? 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இதில் பேரம் நடந்து பிறகு 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக தருவதில் வந்து முடிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையைக் கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவிய 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். இதன் பிறகு அவரிடத்தில் 15 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், அவர் பணியாற்றி வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 13 மணி நேரமாக சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அவர் தெரிவித்ததாவது, “இதை அரசியலாக பார்ப்பதைவிட, ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு, லஞ்சம் வாங்கியுள்ளார். அவரை கைது செய்திருக்கிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன். இது மிகவும் புரஃபஷ்னலா அணுகவேண்டிய விஷயம். இதற்காக மொத்த அமலாக்கத்துறை மீதும் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை மீது தவறு இல்லை. மனிதர்கள் செய்யும் தவறுக்கு அமலாக்கத்துறை மீது தவறு சொல்ல முடியாது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

 

இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. அவர்களுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவு. அதுவும் தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். சம்மந்தமே இல்லாமல் ஒரு கட்சியையும், கட்சியின் தலைவரையும் தொடர்புபடுத்தி பேசும் அளவிற்கு மெச்சூரிட்டி குறைவான தமிழ்நாடு அரசியல்வாதிகளை வைத்தே தமிழ்நாடு வாழ்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்