உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக் கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்து வருகின்றனர். இக்கோவிலில் அன்னதானத் திட்டம் நடைமுறையில் இருந்தாலும், அது மதியம் மட்டும் தினசரி 300 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
திருப்பதி போன்று பக்தர்கள் அதிகம் வரக்கூடிய புகழ்பெற்ற கோவில்களில் காலை முதல் இரவு கோவில் நடையடைப்பு வரை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திராவிட மாடல் அரசான தமிழகத்தை ஆளும் திமுக அரசு சட்டமன்றத்தில் அறிவித்தது.
அதன்படி நேற்று முப்பொழுதும் அன்னதானத் திட்டத்தினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆகியோர் பக்தர்களுக்கு அன்னதானத்தினை வழங்கினர். அதோடு, அவர்களும் பக்தர்களோடு அமர்ந்து அன்னதானம் சாப்பிட்டனர்.
அன்னதானம் வழங்க கோவில் வளாகத்தில் புதியதாக அன்னதானக் கூடம் உருவாக்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மூன்று வேளைகளிலும் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.