பேராசிரியர் தகுதியினை ஆராய அமைக்கப்பட்ட ஆனந்த் குமார் கமிட்டியின் அறிக்கையைப் பின்பற்றி, அண்ணா பல்கலைக்கழகம் பேராசிரியரை பணி நீக்கம் செய்ய இடைக்காலத்தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு நெல்லை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைத் தலைமையிடமாகக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட மாவட்டங்களில் இயங்கி வந்த அண்ணா பல்கலைக்கழகங்கள், கடந்த 2012-ம் ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒன்றாக இணைக்கப்பட்டன. அப்படி இணைக்கும் போது பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நியமனங்கள் முறையாகவும், விதிகளின்படியும் நடைபெறவில்லை எனக் கூறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றிதழ்கள், கல்வித் தகுதி ஆகியவற்றை, அவ்வப்போது குழு அமைத்து, பணி நியமனம் தொடர்பாக ஆய்வு செய்து, தகுதியில்லாத பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
இந்நிலையில், உதவிப் பேராசிரியராக இருந்து தற்போது இணைப் பேராசிரியராக பணியாற்றி வரும் கோவையைச் சேர்ந்த சந்திராகுமாரமங்கலம் என்பவர், தன்னைத் தகுதியில்லாத பேராசிரியர் பட்டியலில் வைத்துள்ளதாகவும், தன்னைப் பணியில் இருந்து நீக்கத் தடை விதிக்கக் கோரியும், 2015-ம் ஆண்டு முத்துசாமி கமிட்டி அளித்த பரிந்துரைகளின்படி தன்னுடைய பணி நியமனத்தை உறுதிப்படுத்தும் வேண்டும் என்றும், இது தொடர்பான குளறுபடிகளை களையக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன், ஆனந்த் குமார் கமிட்டி பரிந்துரையின்படி, இணைப் பேராசிரியர் சந்திராகுமாரமங்கலத்தை பணி நீக்கம் செய்ய இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டு, 4 வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.