கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடத்தப்பட்டன. தற்போது இந்த 2020-2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் ஆன்லைன் வழியாகவே நடந்து முடிந்தன. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டு இருப்பதால் வீட்டில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு, எல்.கே.ஜி. முதல் பி.எச்.டி வரையிலான எல்லா பிரிவுக்கும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடந்துவருகின்றன.
கடந்த 9 மாதங்களாக கல்லூரி, பல்கலைக்கழக விடுதிகள் திறக்கப்படாத நிலையில் விடுதி கட்டணம் செலுத்து, உணவு கட்டணத்தை செலுத்து என மாணவ, மாணவிகளுக்கு சர்க்குலர் அனுப்பியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
அண்ணா பல்கலைக்கழம் எம்.ஐ.டி கேம்பஸில் விடுதியில் தங்கி, இரண்டாம் ஆண்டு முதுகலை பொறியியல் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனுப்பிய கடிதத்தை நம்மிடம் தந்தார் அந்த மாணவர். அதில், இந்த பருவத்துக்கான மெஸ் அட்மிஷன், ரூம் வாடகை, எலக்ட்ரிசிட்டி பில், குடிதண்ணீர் கட்டணம், ரெஷிடென்ஷியல் சர்விஸ் சார்ஜ், பிளாக் டெவலப்மெண்ட் அன்ட் மெயின்டெய்ன் சார்ஜ், ஹாஸ்டல் கோ-ஆப்ரேட்டிவ் சார்ஜ், உணவு கட்டணம் என தனித்தனியாக எவ்வளவு என குறிப்பிட்டு விடுதியில் தங்கி சைவம் சாப்பிடும் மாணவர்கள் மொத்தமாக 24,820 ரூபாயும், அசைவம் சாப்பிடும் மாணவர்கள் 27,820 ரூபாயும் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது அந்தக் கடிதம்.
கடந்த நவம்பர் 23ஆம் தேதி மாணவ, மாணவிகளின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில் வரும் 2.12.2020ஆம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக பணத்தை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக விடுதி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேள்வி மேல் கேள்வி எழுப்ப, புதுசா வந்து விடுதியில் இணைபவர்களுக்கு என சமாளித்துள்ளதாம்.
கடிதத்தில், முதுகலை பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு என தெளிவாக குறிப்பிட்டுவிட்டு கேள்வி எழுப்பியதும் புதியதாக விடுதிக்கு வருபவர்களுக்கு தான் இந்த கட்டணம் என ஜகா வாங்குகிறார்கள். நியாயமாக பார்த்தால் கடந்தாண்டு மார்ச் மாதமே கல்லூரியை மூடியவர்கள், விடுதியில் இருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அப்போது நாங்கள் கட்டிய விடுதி மற்றும் உணவு கட்டணத்தையே எங்களுக்கு பாதியளவு திருப்பி தந்திருக்க வேண்டும். இதுவரை அதுப்பற்றி மூச்சுகூட விடவில்லை நிர்வாகம் என்கிறார்கள் மாணவ, மாணவிகள்.