Skip to main content

மீண்டும் ஜாமீன் கேட்ட அங்கித் திவாரி; கைவிரித்த மதுரை கிளை

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Ankit Tiwari denied bail

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிக்கு ஜாமீன் வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக இருக்கக்கூடிய டாக்டர் சுரேஷ்பாபுவின் சொத்துக்குவிப்பு வழக்கை விசாரிக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற முயன்றபோது, கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு மாற்றினார்கள்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி இரண்டாவது முறையாக தனக்கு ஜாமீன் வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் பொழுது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டது. ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது.

வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் மார்ச் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது.  திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளது. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது என கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை மார்ச் 12 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்