திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க. எம்.எல்.ஏ.வான அனிதா ராதாகிருஷ்ணன் சமூக வலைதளங்களின் மூலமாக சுபாஷ் பண்ணையார் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். என் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசுகிறார் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமாரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனிடம் இது குறித்து நாம் பேசியதில், “தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கடத்தி படுகொலை செய்யப்பட்டார். அது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் தேவையான நிவாரணமும் நியாயமும் கிடைக்க வேண்டும் என்று எனது தலைமையில் தட்டார்மடத்தில் கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் போராட்டம் நடந்தது. தொடர்ந்து சொக்கன்குடியிருப்பில் நடந்த போராட்டத்தில் நான் இருந்தபோது எனது தண்டுப்பத்து வீட்டின் முன்னே நிறுத்தப்பட்டிருந்த எனது காரை பனங்காட்டுப் படையைச் சேர்ந்தவர்கள் அடித்து உடைத்துள்ளனர். அதில் தொடர்புடைய இரண்டு நபர்கள் போலீஸ் விசாரணையில் உள்ளனர். அது குறித்து வழக்கும் உள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயமும், நிவாரணமும் அளிக்க வேண்டும் என்று கோரிக்கையோடு தி.மு.க போராட்டம் நடத்தியது. ஆனால் பனங்காட்டுப் படையினரோ உடலை வாங்குங்கள் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சமாதானம் செய்தது. அதை நான் சுட்டிக் காட்டினேன். நாங்கள் இடைஞ்சலாக இருக்கிறோம் என்று கருதினார்கள். அதன் பிறகே கடந்த 23ஆம் தேதியன்று மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார் சமூக வலைதளங்களில் என்னை மிரட்டும் வகையிலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் பேசியுள்ளார். எனவே என் உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்புத் தரும்படியும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் எஸ்.பி.யிடம் புகார் செய்துள்ளேன்.” என்றார் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன்.