அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா? தேசிய ஆதி திராவிட ஆணையம்
மாணவி அனிதா தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளதாக தேசிய ஆதி திராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேசிய ஆதி திராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன்,
அனிதா வழக்கை தொடர்ந்து விசாரித்து வருகிறோம். வேளாண் படிப்புக்குத் தயாரான சூழலில் அனிதா மரணத்துக்கு காரணம் என்னவென்று விசாரிக்கிறோம். அவரது மரணத்துக்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது. அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளாரா என விசாரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அனிதா மரணம் தொடர்பாக அறிக்கை வந்தவுடன் தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கப்படும்.
அகில இந்திய அளவில் மாணவர்கள் போட்டியிட நீட் தேர்வு தேவை. தமிழகத்தில் தகுதித் தேர்வுகளை எதிர்கொள்ள மாநில அளவில் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். பள்ளிகளில் 18 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. கல்வியில் எஸ்டி, எஸ்சி மாணவர்களுக்கு 18 சதவிகிதம் இடஒதுக்கீடு தொடர்பாக ஆய்வுசெய்துள்ளோம்" என்று கூறினார்.