
தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. அதே போன்று அரசு வழங்கும் சலுகைகளும் ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது கரோனா நிவாரணமாக ஒரு குடும்பத்திற்கு 2000 ரூபாய் பணமும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் மக்களுக்கு வழங்கிய மளிகை பொருட்களைக் களவாட ஆரம்பித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தேவனூர் கிராமத்தில் நேற்று நிவாரண உதவித் தொகை 2000 ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மளிகை பொருட்கள் தொகுப்பில் இரண்டு பொருட்களைக் குறைவாக வைத்து அந்த ரேஷன் கடை ஊழியர் வழங்கியுள்ளார். இதைக் கண்டு கோபமடைந்த அப்பகுதி பெண்கள் தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான செஞ்சி மஸ்தானிடம் ஃபோன் மூலம் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் மஸ்தான், நேரடியாக அந்தக் கிராமத்துக்குச் சென்று ரேஷன் கடை மூலம் மளிகை பொருட்கள் எப்படி வழங்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார். அப்போது உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இரண்டு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு 12 பொருட்களை மட்டும் மக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மஸ்தான் உத்தரவிட்டார்.

அதன்படி அந்த நியாய விலை கடை விற்பனையாளர் கர்ணன் என்பவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று இன்று விழுப்புரம் நகரில் உள்ள சில ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களைக் குறைத்து தொகுப்பு பைகளை வழங்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்ப அட்டைதாரர்கள், அந்த தொகுப்பு பொருட்கள் அடங்கிய பைகளைச் சம்பந்தப்பட்ட அந்த கடைக்காரர்களிடமே கொடுத்துவிட்டு எங்களுக்கு எந்த பொருட்களும் வேண்டாம் என்று கோபமாகக் கூறி விட்டு வந்துள்ளனர். இந்தத் தகவல் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர், உடனடியாக சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்து முறையாக அனைவருக்கும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததோடு பொருட்களைக் குறைத்துக் கொடுத்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் விழுப்புரம், மணி நகரில் உள்ள ரேஷன் கடையிலும் இதுபோன்ற புகார் எழுந்தது. அதனை விசாரித்து உடனடியாக, பொதுமக்களுக்கு குறைவாகப் பொருட்களை வழங்கிய ரேஷன் கடை விற்பனையாளர் வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.