ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெண் யானை ஜெயமால்யதா பாகனால் துன்புறுத்தப்படுவதாக தகவலுடன் வீடியோ ஒன்று பரவிவரும் நிலையில், அந்த யானையைக் குளிப்பாட்டி குஷிப்படுத்திக் கொண்டிருந்தனர் பாகன்கள். கோடைகால வெப்பத்தைச் சமாளிப்பதற்கு, அந்த யானையை தினமும் குளிப்பாட்டி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு, புத்துணர்ச்சி முகாமில் ஜெயமால்யதா யானை, பாகனால் அடித்து துன்புறுத்தப்பட்ட காட்சி வலைத்தளங்களில் வைரலாக, அந்தப் பாகன் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார். அதனைத் தொடர்ந்து, வெப்பமான சூழலில் பராமரிக்கப்பட்டு வந்த யானை சுதந்திரமாகச் செயல்படும் விதத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள கிருஷ்ணன் கோவில் ஏரியாவில், தனியாகக் கொட்டகை அமைத்து பராமரித்து வருகின்றனர். தற்போது 10 பெரிய ஷவர்களை அமைத்து யானையைக் குளிப்பாட்டுகின்றனர். அங்கு ராட்சத மின்விசிறியில் இருந்து விசிறப்படும் காற்று யானையை உற்சாகமாக வைத்திருக்கிறது.
காடுகளில் அதிக தூரம் நடந்து பழக்கப்பட்ட யானையை, கோவில் அருகிலேயே பராமரிப்பதைக் காட்டிலும், சற்று தூரத்திலுள்ள கிருஷ்ணன் கோவில் ஏரியாவில் பராமரித்து வருவதால், யானை தினமும் சில கிலோமீட்டர் தூரமாவது நடக்கிறது. இதன்மூலம், யானையின் ஆரோக்கியத்திற்கு ஒரு குறையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வரும் பக்தர்களை குஷிப்படுத்தும் யானையை, குஷி மூடிலேயே வைத்திருப்பது நல்லதுதான்!
படம்: மிஸ்டர் பெல்