பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்பார்கள். அதுபோல, கோலத்தில் கைவைத்த விஷயம் அலங்கோலமாக முடிந்திருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடக்கின்ற தருணம் இது. அதற்காக, கோவிலுனுள்ளே கோலங்கள் வரைந்திருந்தனர். அந்தக் கோலங்களில் தாமரை இடம்பெற, தேர்தல் அதிகாரியின் கண்ணில் பட்டுவிட்டது. பிறகென்ன? பா.ஜ.க. கட்சியின் சின்னமான தாமரையை எப்படி கோவிலுக்குள் வரையலாம்? என்று நடவடிக்கை எடுத்துவிட்டார். ஆம். ஆண்டாள் கோவில் செயல் அலுவலருக்குத் தகவலைத் தெரிவித்துவிட்டு, தாமரை எந்தெந்த இடங்களில் வரையப்பட்டிருந்ததோ, அங்கெல்லாம் அழித்துவிட்டது காவல்துறை.
இந்த விவகாரம் வலைத்தளங்களில் பரவ, தமிழக பா.ஜ.க.தலைவர் தமிழிசை துடித்துப் போய் அறிக்கை வெளியிட்டார். ‘ஸ்ரீஆண்டாள் கோவிலில் ஆண்டாண்டு காலமாக பொதுமக்களால் வரையப்படும் தாமரைக் கோலத்தை அழித்த அதிகாரிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். மஹாலட்சுமி அமர்ந்திருக்கும் தாமரையை பக்தி நோக்கத்தோடு பொதுமக்கள் வரைந்திருக்கின்றனர். இது, தேர்தல் நோக்கத்தோடு வரையப்பட்டது அல்ல. அப்படியென்றால் கை காண்பித்தால் தேர்தல் சின்னம் என்று கையை உடம்பிலிருந்து அகற்றி விடுவீர்களா? தினமும் சூரியன் உதிக்கின்றது. தேர்தல் சின்னம் என்று சூரியனை மறைத்து விடுவீர்களா? இந்துமத பழக்கங்களையும், உணர்வுகளையும் அதிகாரத்தின் பெயரால் அழிக்க முற்படுவது கண்டிக்கத்தக்க செயலாகும்.’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் ராகவன் அடித்த கமென்ட் இது -
“தேர்தல் அதிகாரி புண்ணியத்தில் தாமரைச் சின்னத்துக்கு இலவச விளம்பரம் கிடைத்திருக்கிறது.”