தமிழ்நாட்டில் பௌத்தம் இருந்ததற்கான சான்றுகளும், தடயங்களும் ஆங்காங்கே கிடைத்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பழமையான புத்தர் சிலைகள் இருப்பதாக கூறப்பட்டாலும், ஒரு சிலை காணாமல் போய்விட்டது. மற்றொரு சிலை அறந்தாங்கி அருகே கரூர் கிராமத்தில் உள்ள நிலவளமுடைய ஐயனார் கோயில் வளாகத்தில் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டுவருகிறது.
கரூரில் உள்ள புத்தர் சிலை கி.பி. 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கூறப்படுகிறது. புத்தர் தியான கோலத்தில் இடது கை மேல், வலது கை வைத்துள்ளார். அதில் தர்மச் சக்கரம் தெரிகிறது. கழுத்தில் மூன்று கோடுகள், மார்பு உடை, இடுப்பு கச்சை, தலையில் ஒளிச்சுடர் ஆகியவற்றுடன் காணப்படுகிறது.
இதுகுறித்து ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற தலைப்பில் ஆய்வுசெய்துள்ள ஆய்வாளர் ப. ஜம்புலிங்கம் கூறும்போது, “பௌத்தம் பற்றிய ஆய்வுக்காக கடந்த 24 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த தஞ்சை, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சென்றபோது சுமார் 60 புத்தர் சிலைகளைக் காண முடிந்தது. தமிழகத்தில் அசோகர் காலத்தில் வாழ்ந்த பௌத்தம், பல நிலைகளில் ஏற்றம் இறக்கம் காணப்பட்டாலும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை பௌத்தம் இருந்ததாக கும்பகோணம் கும்பேஸ்வரன் கோயில் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. ஆனால், இன்றும் புத்தர் சிலை வழிபாடுகள் உள்ளது என்பதில் சிறிதும் அய்யமில்லை.” என்றார்.
நிகழ்வில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் ஆசிரியர் மங்கனூர் ஆ. மணிகண்டன் மற்றும் தொல்லியல் ஆய்வுக் கழக உறுப்பினர் ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மணிசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் மாணிக்கம் மற்றும் கோயில் முறை படிமாற்றார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.