சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று (28/05/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ, பொதுக்குழு உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், பா.ம.க.வின் புதிய தலைவராக அன்புமணி ராமதாஸை, ஜி.கே.மணி முன்மொழிய, பொதுக்குழு உறுப்பினர்கள் வழிமொழிந்தனர். இதனால் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், கௌரவத் தலைவராக ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தேர்வுச் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து பொன்னாடைப் போர்த்தி, பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்வின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.மூர்த்தி உடனிருந்தார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை, அன்புமணி ராமதாஸ் எம்.பி., ஜி.கே.மணி எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.