
தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தப்படாத நிலையில், தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதைப் பாமகவினர் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
அதனால் தமிழ்நாடு முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் தங்கள் வீடுகளின் முன்பு கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து 5 பேருக்கு மிகாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆணைப்படி, தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், நாட்டு மக்களின் நலன் கருதி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் சென்னையில் உள்ள அன்புமணி இராமதாஸ், தன் இல்லத்தின் முன்பு மதுவிலக்கிற்கு ஆதரவாகவும், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராகவும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அறப்போராட்டம் நடத்தினார்.