Skip to main content

   காவிரி டெல்டாவில் மேலும் 104 எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது! அன்புமணி

Published on 27/06/2019 | Edited on 27/06/2019

 


பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை   ’’இராமநாதபுரம் மாவட்டம் முதல் கடலூர் வரையிலான காவிரி பாசன மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 104 எண்ணெய்க் கிணறுகளை தோண்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீர்மானித்திருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் இயற்கை வளங்களை சூறையாடும் வகையிலும், விவசாயத்தை அழிக்கும் வகையிலும் எண்ணெய்க் கிணறுகளை அமைக்க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

 

a

 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்த காவிரி பாசன மாவட்டங்களை இப்போது எண்ணெய்க் களஞ்சியமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒரு கட்டமாகவே காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவில் எண்ணெய்க் கிணறு அமைக்கும் பணிகளை  மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வகையில் தான் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 104 இடங்களில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கிணறுகளை அமைக்க தீர்மானித்துள்ள ஓ.என்.ஜி.சி, அதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பம் அளித்துள்ளது.

 

 

காவிரி பாசன மாவட்டங்கள் ஏற்கனவே வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, வேளாண் சாகுபடி பரப்பு குறைந்து வரும் நிலையில், இப்போது புதிதாக செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக மாற்றிவிடும். ஓ.என்.ஜி.சி அமைக்கவுள்ள 104 கிணறுகளில் 87 கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெயும், 17 கிணறுகளில் இருந்து இயற்கை எரிவாயுவும்  தோண்டி எடுக்கப்படவுள்ளது. இந்த ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் அனைத்து காவிரி பாசன மாவட்டங்களிலும் விவசாயமும், நீர் ஆதாரங்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

 

காவிரி பாசன மாவட்டங்களில் இதுவரை 200-க்கும் கூடுதலான கச்சா எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, மனிதர்களுக்கும், சுற்றுச் சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு போசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கதிராமங்கலம், நரிமணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் சந்திப்பு பயணம் சென்ற போது, இந்த பாதிப்புகளை என்னால் நேரடியாக பார்க்க முடிந்தது. இத்தகைய சூழலில் மேலும் 104 கிணறுகள் அமைக்கப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் வாழத்தகுதியற்ற மாவட்டங்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

 

உலகின் வறுமை மிகுந்த நாடுகளில் கூட மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் தான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் மட்டும் தான் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்படாமல் திட்டங்கள் திணிக்கப்படுகின்றன. இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை... தங்களின் வருவாய் அதிகரித்தால் போதுமானது என்ற எண்ணத்துடன் தனியார் பெருநிறுவனங்களைப் போல செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இத்தகைய துரோகத்தை மன்னிக்க முடியாதது.

 

காவிரி பாசன மாவட்டங்களில் எண்ணெய்க் கிணறுகள் என்ற எமன் அதிக அளவில் அமைக்கப்பட்டது கடந்த 30 ஆண்டுகளில் தான். இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது திமுக தான். தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்தது திமுக அரசு தான். அதன்பிறகு அதிக எண்ணிக்கையிலான எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டதும் திமுக ஆட்சிக் காலங்களில் தான். அப்போது வளரத் தொடங்கிய ஹைட்ரோ கார்பன் பூதம் தான் இப்போது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மிரட்டும் அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது.

 

காவிரி பாசன மாவட்டங்களில் 104 எண்ணெய் மற்றும் எரிவாயு கிணறுகளை அமைக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் முடிவு அங்குள்ள மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த எண்ணெய்க் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு  சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு வழங்கக் கூடாது. இவ்விஷயத்தில் மக்களின் உணர்வுகளை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி இத்திட்டத்தை தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’


                                       

சார்ந்த செய்திகள்