திமுக இளைஞர் அணியில் உதயநிதிக்கு பொறுப்பு ஏற்றவுடன் திமுக இளைஞர் அணியின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்தோடு இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும் என்று மதுரையில் அறிவித்து களம் இறங்கி தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக பொறுப்பாளர்கள் நியமித்தார். இதையடுத்து திருச்சி அன்பில் மகேஷ் கொங்கு மண்டலத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் அடிப்படையில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று சுறுசுறுப்பாக வேலையில் இறங்கினார்.
இதையடுத்து நேற்று கரூர் மாவட்டம் ஈசநத்தம், நெடுங்கூர், உப்பிடமங்கலம் உள்ளிட்ட இடங்களில் குளம் தூர்வாரும் பணிகளை தொடங்கி வைப்பதற்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் மூன்று குளங்களில் திமுக இளைஞரணியினர் நேற்று தூர் வாரும் பணிகளை தொடங்க இருந்த நிலையில், திடீரென இரவோடு இரவாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தூர்வாரும் பணிகளை ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. "நாங்க செய்ய இருந்த வேலைகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
14ஆம் தேதி முதல் திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது. அப்போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சீக்கிரமாக வந்து திமுக இளைஞரணியில் இணைந்து கொள்ளலாம்" என அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறினார்.
இதற்கு இடையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர், "மகேஷ் பொய்யாமொழி, என்னை தி.மு.க வில் வந்து சேர்வதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார், எனக்கு தி.மு.க வில் சேருவதற்கு வயது இல்லை, ஏனென்றால், தி.மு.க கட்சியில் தான் 70 வயது வரை இளைஞரணியில் இருக்கலாம் என்றதோடு, 16 கட்சிகளுக்கு பதவிக்காக சென்றவரை அருகில் வைத்து கொண்டும், அவர்களை வேண்டுமென்றால், மாணவரணி மற்றும் இளைஞரணி பொறுப்பு கொடுக்கலாம், ஆனால் ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகின்றோம்" என்றார்.
கொங்கு மண்டலத்தில் திமுக இளைஞர் அணி ஏரி தூர்வாரும் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக நடந்த இருந்த நிலையில் அதிமுக அமைச்சர் இரவோடு இரவாக தூர்வாரியதும், அதே நேரம் செந்தில்பாலாஜி தேர்தல் நேரத்தில் 3 சென்ட் நிலம் தருகிறோம் என்று சொன்ன தேர்தல் வாக்குறுதி எங்கே என்று போர்டு வைத்து அரவக்குறிச்சி தொகுதி மக்கள் கிருஷ்ணராயபுர எல்லையில் மறிப்பது என்று ஏற்பாடு செய்து மக்கள் மத்தியில் இரண்டு கட்சிகள் சார்பில் மக்களிடம் நல்லபேர் எடுக்க மாறி மாறி செய்த அரசியல் ஒரே கலகலப்பாக இருந்தது.