சென்னை கீழ்பாக்கத்துக்குப் பதில் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது.
ஸ்டேடியத்தில் உள்ள சிறப்பு விளையாட்டு ஆண்கள் விடுதியில் 4 கவுன்ட்டர்களில் தினமும் 300 பேருக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும். ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஐந்தாவது நுழைவு வாயில் (மை லேடி பூங்கா) வழியாக மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர். ரெம்டெசிவிர் மருந்தை வாங்கிய பிறகு, நான்காவது வாயில் வழியாக மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுவர். ரெம்டெசிவிருக்காக இடைத்தரகர்கள் யாரையும் அணுக வேண்டாம் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "'ரெம்டெசிவிர்' (Remdesivir) மருந்தை விற்பனை செய்யும் மையங்களில் அலைமோதும் கூட்டத்தைத் தவிர்க்க, அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த மருந்தினை விற்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மருந்து வாங்க வருபவர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அளவுக்கு இந்த மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இதனை உடனடியாக முறைப்படுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து, தேவைப்படுவோர் அனைவருக்கும் எந்தவித சிரமமும் இன்றி ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும், இம்மருந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.