திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 28 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 10, பாமக 2, சுயேட்சை 1 , அமமுக 1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது. அதிமுக 14 இடங்களில் வெற்றி பெற்றுயிருந்தாலும் ஆளும்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சுயேட்சை, அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களான சாத்தனூர் முருகன், மேல்கரிப்பூர் முருகேசன் இருவரையும் தங்கள் பக்கம் இழுக்க முயன்றது.
இதனை உணர்ந்த திமுகவினர் திமுக எம்.எல்.ஏ செங்கம் கிரி, தண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், அந்த கவுன்சிலர்களிடம் பேசி திமுகவுக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் தேர்தலில் செலவு செய்த தொகையை திமுக பிரமுகர்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.
இதனால் இரு கவுன்சிலர்களும் திருவண்ணாமலை தெற்கு மா.செ முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டனர். தற்போது திமுகவின் பலம் 16 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எந்த வித நெருக்கடியும் இல்லாமல் திமுகவை சேர்ந்தவர் சேர்மன் மற்றும் துணை சேர்மனாக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்கிறார்கள் திமுகவினர்.ஆளும்கட்சியாக இருந்தும் நம்மால் இழுக்க முடியவில்லையே என அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.