கரோனா வைரஸ் அச்சுறுத்தல் திருநள்ளார் சனீஸ்வரபகவானின் கதவையும் பூட்டவைத்துவிட்டது. வரும் 31ம் தேதி வரைபக்தர்கள் யாரும் கோயிலுக்கு வரவேண்டாம் என்று அறிவித்து மூட உத்தரவிட்டிருக்கிறார் காரைக்கால் மாவட்ட ஆட்சியர்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை உறையவைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் தமிழகம் , காரைக்காலையும் விட்டுவைக்காமல் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கரோனா அதிவேகமாகப் பரவி வருவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறுகட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்குத் தடைவிதித்து வருகிறது.
அந்த வகையில் உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் மாவட்ட திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பனீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற நளன் குளத்தில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித நீராடுவதைக் கட்டுபடுத்த முடியவில்லை என அதனைத் தடுக்கும் வகையில் கடந்த வாரம் குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார் வைத்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் அங்காங்கு பள்ளங்களில் கிடக்கும் தண்ணீரை பாட்டில்களில் அள்ளி பக்தர்கள் புனித நீராடுவதை நிறுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து,நோய்த் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ளும் பொருட்டு கோயில் மூடப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் கூறுகையில்," காரைக்கால் திருநள்ளார் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருவதால் அச்சம் பக்தர்களிடையே உள்ளது. இதன் இந்த நிலையில் புதுச்சேரி முதல்வரின் பரிந்துரையின் பேரில் கோயில் நடை 31ம் தேதி வரை மூடப்படுகிறது. அதேசமயம் தினசரி கோவிலில் பூஜைகள் தடையின்றி நடைபெறும். கோவில் நிர்வாகத்தினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வருகிற 31 ம் தேதி வரை பக்தர்கள் யாரும் கோவிலை நாடி வரவேண்டாம்," எனக் கூறியிருக்கிறார்கள்.