நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அமமுக இணைய இருப்பதாகவும், அதற்கான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக, தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள நிலையில் பாமக-அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைவதற்கான கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. நாளை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிலையில் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் பிரதமரை சந்திக்க இருக்கின்றன. பாஜக கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்துள்ள நிலையில் நாளை கூட்டணிக் கட்சி தலைவர்கள் மோடியை சந்திக்க உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.