தன்னுடன் திருமணம் நிச்சயக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்டதால் மனமுடைந்த தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் மாலத்தீவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தற்கொலை முடிவுக்காக அவர் நண்பர்களுக்கு அனுப்பியுள்ள உருக்கமான ஆடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி பூங்கொடி இவர்களுக்கு. ராஜேஷ் (31) என்ற மகன் இருந்தார். இவர் மாலத்தீவில் இன்ஜினியராக பணியில் இருந்தார். ராஜேஷுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த பெற்றோர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் விளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடத்தியிருந்தனர். திருமணத்திற்கான அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்டது.
வருகின்ற ஏப்ரல் 26 ஆம் தேதி ராஜேஷ் - புவனேஸ்வரிக்கு திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்திற்காக விடுமுறை வேண்டும் என்பதால் மாலத்தீவு சென்று பணியாற்றும் நிறுவனத்தில் விடுமுறை கேட்டுவிட்டு வருவதாக ராஜேஷ் மாலத்தீவு சென்றுள்ளார். மாலத்தீவுக்கு சென்றதால் புவனேஸ்வரியும் ராஜேசும் தொலைபேசியில் பேசி வந்துள்ளனர்.
திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில் கடந்த 14ஆம் தேதி செல்போனில் ராஜேஷை தொடர்பு கொண்ட புவனேஸ்வரி 'நான் ஏற்கெனவே வேறு ஒருவரை காதலித்து வந்தேன். அவர் தனக்கு தொல்லை கொடுக்கிறார். எனவே நான் இல்லை என்றாலும் நீங்கள் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். என அழுதபடி கூறியுள்ளார். இது ராஜேஷிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
திருமண அழைப்பிதழ்கள் எல்லாம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், புவனேஸ்வரி சொன்ன இந்த தகவல் அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. அதே நேரம் புவனேஸ்வரி வேறொருவருடன் திருமணம் செய்து கொண்டதாக அவருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக அந்த இளைஞர் வெளியிட்டுள்ள ஆடியோவில், 'காலையிலிருந்து அவங்க வீட்டில் இருக்கிறவர்களுக்கு போன் பண்றேன் யாரும் எடுக்கல. இன்னைக்கு காலையில கேட்டா கல்யாணம் வேற ஒரு பையனோட முடிஞ்சிருச்சுன்னு சொல்றாங்க. என்னால முடியல மச்சான். என்ன பண்ண போறேன்னு எனக்கே தெரியல. இதுல இருந்து எப்படி மீண்டு வர போறேன்னு தெரியல. அம்மாவ பாத்துக்கோ.. அக்காவ அழுவ வேணான்னு சொல்லு. எங்க அப்பாவோட மானம் தான் முக்கியமா இருக்குது. அதை விட பெருசா எதுவும் தெரியல. என்னால் முடியல' என பேசிய அந்த வாட்ஸ் ஆப் ஆடியோ இணையத்தில் வெளியானது.
இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய மாலத்தீவு போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு இந்திய தூதரகத்திடம் உடலை ஒப்படைத்தனர். இதனையடுத்து ராஜேஷின் உடல் விமானம் மூலம் எடுத்து வரப்பட்டு பின்னர் மேல்மலையனூர் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் அவரது உடலை கண்டு கதறி துடித்த காட்சிகள் கண்ணீரை வரவழைத்தது. இந்த தற்கொலை சம்பவம் அந்த பகுதியில் மிகப் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.