Skip to main content

சென்னையில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை

Published on 09/07/2018 | Edited on 09/07/2018


பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இதற்காக அவர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்திப்பதற்காக அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.

இன்று காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தேசிய செயலாளர் குபேந்திர யாதவ் எம்.பி., மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர்.

அதன்பிறகு 11.30 மணிக்கு அமித்ஷா, தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்திற்கு சென்று சற்று ஓய்வு எடுக்கிறார். பின்னர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்க கடற்கரையில் உள்ள அரங்கில் தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முன்தயாரிப்புக்கான கூட்டம் பகல் 12 மணிக்கு தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு அரசியல் விவகார குழுவைச் சேர்ந்த 11 பேரிடம் 39 தொகுதிகள் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார். நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலைகள் குறித்த விவாத நிகழ்ச்சியும் நடக்கிறது. இந்த கூட்டம் பகல் 2 மணி வரை நடக்கிறது.
 

 

 

பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை சங்க் பரிவார் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிக்கிறார்.

தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திப்பது குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 3 ஆயிரம் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும் விவாதிக்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வியூகம் வகுப்பது குறித்தும் அந்த மாநில பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை அந்தமான் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. பின்னர் இரவு தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர். விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு நாளை காலை டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

 

சார்ந்த செய்திகள்