தமிழகத்தை பற்றி அமித்ஷா அமித்ஷா நல்ல விதமா தான் சொல்லியிருப்பாரு, ஆனா எச்.ராஜா தான் தப்பா மொழி மாற்றம் செய்துவிட்டார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்துவது குறித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைகூட்டம் நடத்தினார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் ஊழல் நடக்கிறது எனக் கூறினார். இது தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சு குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,
தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்துவதற்காக அமித்ஷா இந்த கூட்டத்தை கூட்டியிருந்தார். அது அவர்களுடைய கட்சியின் விருப்பம். அதில் தவறில்லை. அதிமுகவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்கள் கூட்டம் நடத்துவது போல பாஜகவும் நடத்தியுள்ளது.
அந்த கூட்டத்தில் அமித்ஷா நுண்ணுயிர் பாசனம் என்று பேசினார். அதனை எச்.ராஜா “சிறுநீர் பாசனம்” என்று தவறுதலாக மொழி பெயர்த்தார். அதுபோல தான், அமித்ஷா தமிழகத்தை பற்றி நல்ல விதமாக சொன்னதை எச்.ராஜா தவறுதலாக மாற்றி மொழி பெயர்த்து கூறியுள்ளார்.
தமிழகத்தை பற்றி நன்றாகத்தான் அமித்ஷா சொல்லி இருப்பார். ஆனால் இவர்தான் தவறாக மொழி மாற்றம் செய்து இருக்கிறார். தமிழக அரசை குற்றம்சாட்டவில்லை, ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றி தான் பேசினார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.