வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மே 13, 14, 15 என மூன்று நாட்கள் ஆம்பூர் வர்த்தக மையத்தில் பிரியாணி திருவிழா நடக்கிறது.
ஆம்பூர் நகரில் மட்டும் சிறியதும், பெரியதுமாக சுமார் 100 பிரியாணி ஹோட்டல்கள் உள்ளன. சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, நாட்டுக்கோழி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, முயல் பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றன. இங்குள்ள 100 ஹோட்டல்களில் சரிபாதி மாட்டுக்கறி பிரியாணி ஹோட்டல்கள். மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இல்லை என்பது உணவு பிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தலித் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர் குஷ்வாவை நேரில் சந்தித்து மாட்டுக்கறி பிரியாணி சாப்பிடுபவர்கள் அதிகளவில் உள்ளனர். அதனால் அதனையும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அரசின் சார்பில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவில், மாட்டுக்கறி பிரியாணிக்கு இடமில்லை எனச் சொல்லி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நாளை தொடங்கவிருக்கும் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணியை அனுமதிக்காவிடில் இலவசமாக தருவோம் என கோரிக்கை வைத்த அமைப்புகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம்பூரில் அரசு சார்பில் நாளை (13/05/2022) நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா கனமழை எச்சரிக்கை காரணமாக, தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்துள்ளார்.