![thirumavalavan speech](http://image.nakkheeran.in/cdn/farfuture/NFDq04c11Z_dZSEw4ZO3l8CQDLVpghr_d4dYQfjgihE/1650631982/sites/default/files/inline-images/033_0.jpg)
சிதம்பரம் அருகே விபிஷ்ணபுரத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 'கலைஞரின் வருமுன் காப்போம்' திட்டத்துடன் இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம், முதியோர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் வழங்கினார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ கண்காட்சி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சிகளையும் திருமாவளவன் பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''இந்தியா முழுவதும் 18ந் தேதி முதல் 22ந் தேதி வரை 'மஹா ஹெல்த் மேளா' என்ற பெயரில் எம்பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நடக்கிறது. இன்று சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 3 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கட்டணம் தொடர்பாகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கல்விக்கட்டண அறிவிப்பு குறித்து அமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். கல்விக் கட்டணத்தை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
![THIRUMA](http://image.nakkheeran.in/cdn/farfuture/qIDA-R-9Ae8HZ_5Q56QPhWMqzWVCypoGNWv2syNs2Jk/1650632054/sites/default/files/inline-images/044.jpg)
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். அமைச்சர்களை அனுப்பி மசோதா குறித்து ஆளுநரிடம் கேட்கும் போது மசோதாவை எப்போது அனுப்புவோம் என கால வரையறை சொல்ல முடியாது என பதிலளித்திருக்கிறார். இது வேதனைக்குரியது. ஆளுநரை வைத்து பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்யப் பார்க்கிறது. ஒன்றிய அரசின் பிரதிநிதியாகச் செயல்படக்கூடிய ஆளுநர் என்பவர், மாநில அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதற்குதான் ஆளுநர் பதவி. ஆனால் அதற்கு மாறாக மாநிலத்தில் குழப்பத்தையும், பதற்றத்தையும் அவர்களை வைத்து பாஜக செய்கிறது. பாஜக ஆட்சி செய்யாத தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் குழப்பங்களைச் செய்கிறது. ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதல்ல எங்களது கோரிக்கை. ஆளுநர் பதவியே வேண்டாம் என்பதுதான் எங்களின் கோரிக்கை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே ஒரு மீடியேட்டர் தேவையில்லை என்பதுதான் எனது கருத்து.
இளையராஜா மோடியைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவரது கட்சியில் கூட சேர்ந்து கொள்ளட்டும் அதைப்பற்றி கவலை இல்லை. ஆனால் அம்பேத்கரும், மோடியும் ஒரே வழியில் சிந்திக்கக் கூடியவர்கள் இல்லை. இவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பேசியதைத்தான் தவறு என்கிறோம். அம்பேத்கர் சமத்துவத்துக்கான தலைவர். மோடி சனாதனத்திற்கான தலைவர். அம்பேத்கர் மக்கள் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மோடி சனாதன சக்திகளுக்கு சேவை செய்பவர். இரண்டு பேரும் ஒரே நேர்க்கோட்டில் பொருந்தக் கூடியவர்கள் அல்ல. இரண்டு பேரும் இரு துருவங்களாக சிந்திக்கக் கூடியவர்கள். அதனால் இருவரையும் ஒப்பிடுவதை ஏற்க முடியாது சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனைவருக்கும் கனகசபையில் வழிபாட்டு உரிமை உண்டு. அந்த வழிபாட்டு உரிமை சட்டப்பூர்வமான உரிமைகளாக பாதுகாக்கப்பட வேண்டும்'' என திருமாவளவன் கூறினார்.